

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021-க்கான அறிவிப்பை 26.02.2021 அன்று வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த தேர்தலை நேர்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவற்கு உறுதுணையாக இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்கள் விழிப்புணர்வுக்கான C-VIGIL என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கைப்பேசியில் உள்ள ப்ளேஸ்டோர் செயலி மூலம் சி-விஜில் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமீறல்களை புகார்களாக அளிக்கலாம்.
மேற்படி செயலி மூலம் அளிக்கப்படும் புகார்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்களால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்களான ‘1800 425 7017“ மற்றும் ‘ 1077 ”மூலமும் புகார்களை தெரிவிக்கலாம். எனவே இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கார்த்திகா தெரிவித்துள்ளார்.