அவிநாசி,மார்ச்.28:
சேவூர் அருகே பொங்கலுரில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த வெளி மாநில தொழிலாளி உடலை மீட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூர் அருகே பொங்கலூர் ஊராட்சி தாசராபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தாசராபாளையம் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் வெளிமாநில தொழிலாளர் ஒருவர் அடித்து கொலை? செய்யப்பட்டு கிடப்பதாக சேவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலில் காயங்களுடன் கிடந்த வெளிமாநில தொழிலாளியின் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மேற்கு வங்காள மாநில பகுதியைச் சேர்ந்த தசொமார்டி(வயது-44). என்பது தெரியவந்துள்ளது. மேலும், தசொமார்டி, முன் விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா?, அல்லது தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக அவருடன் பணியாற்றி வரும் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

