சென்னை:
சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பு பணிக்கான ரூ.4,000 கோடி மதிப்பிலான டெண்டர் ஒப்பந்தத்தில் பெரிய அளவிலான ஊழல் நடைபெற திமுக அரசு முயற்சிப்பதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் வாயிலாக ஏற்கனவே பெரிய ஊழல் நடைபெற்றதை கடந்த மார்ச் மாதத்தில் வெளிச்சமிட்டோம். தற்போது மீண்டும் மாபெரும் ஊழல் ஒன்றை மேற்கொள்வதற்கு திமுக அரசு திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது,” என கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி 4 மற்றும் 8 ஆகிய இரண்டு மண்டலங்களில் வீடு வீடாகச் சென்றுக் குப்பை சேகரிக்கும் பணிக்கான தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளி கோரிக்கை (tender) கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. பத்து ஆண்டுகள் காலத்திற்கு இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.4,000 கோடியாகும்.
ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க கடைசி தேதி ஏற்கனவே நான்கு முறை தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, நவம்பர் 20, 2025 மாலை 3 மணி வரையேயே புள்ளிகள் சமர்ப்பிக்க கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பித்திருந்தன.
ஆனால், விதிகளை மீறி, மாலை 3 மணிக்கு முடிவடைந்த புள்ளி சமர்ப்பிப்பு காலம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, நவம்பர் 21 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று மாலை 4 மணிக்கு பிறகு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்புக்குப் பின் மேலும் ஒரு நிறுவனம் டெண்டரில் பங்கேற்றுள்ளது.
இதனால், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட மூன்று நிறுவனங்களின் புள்ளி விவரங்களை அறிந்து கொண்டு, விரும்பிய நிறுவனத்திற்கு டெண்டர் கிடைக்க செய்வதற்காகவே கால நீட்டிப்பு செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
“காலம் முடிந்த பிறகு டெண்டரை நீட்டிப்பது விதிமீறல் மட்டுமன்றி, ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மையையும் சீர்குலைக்கிறது. இது முன்பு புள்ளி சமர்ப்பித்த மூன்று நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரூ.4,000 கோடியைச் சுற்றிய ஊழலுக்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தோன்றுகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
“எனவே, உடனடியாக சென்னை மாநகராட்சி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கால நீட்டிப்புக்கு காரணமானவர்கள் யார் என்பதை விசாரணை மூலம் கண்டறிய வேண்டும். மேலும், நேரம் முடிந்த பிறகு புள்ளி சமர்ப்பித்த நிறுவனத்தின் பின்னணியும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டியது அவசியம்,” எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

