மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, டிரேடிங் முறையின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷெர்ஃபேன் ரதர்போர்டையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஷர்துல் தாக்கூரையும் அணியில் இணைத்துள்ளது.
வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்பாக, 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதி சனிக்கிழமைக்குள் வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக, அணிகள் டிரேடிங் முறையின் மூலம் வீரர்களை மாற்றிக் கொள்ளவும், புதிய வீரர்களை சேர்த்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடிய ஷெர்ஃபேன் ரதர்போர்டை ரூ.2.6 கோடிக்கு டிரேடிங் முறையில் பெற்றுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த ரதர்போர்ட், கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் 291 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார். இதற்கு முன்பு அவர் டெல்லி (2019), மும்பை (2020), பெங்களூரு (2022), கொல்கத்தா (2024) அணிகளில் இடம்பெற்றிருந்தார். தற்போது, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்து உள்ளார்.
இடதுகை பேட்ஸ்மேனான ஷெர்ஃபேன் ரதர்போர்ட், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல், ஐபிஎலில் 23 போட்டிகளில் கலந்து கொண்டு மொத்தம் 397 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்குரையும் மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய அவர், ரூ.2 கோடி மதிப்பில் மும்பை அணியில் இணைந்துள்ளார். இதே தொகைக்காகவே அவர் கடந்த ஆண்டு லக்னோ அணியில் இடம்பெற்றிருந்தார்.
34 வயதான ஷர்துல் தாக்குர், கடந்த சீசனில் மாற்று வீரராக விளையாடி 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். இதற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக அவர் ஐபிஎலில் விளையாடிய அனுபவம் பெற்றுள்ளார்.

