பாட்னா: ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார், பீஹார் முதல்வராக 10வது முறையாக இன்று (நவம்பர் 20) பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
பீஹாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 202 இடங்களை கைப்பற்றி ஆட்சியைத் தொடரும் வகையில் பெரும்பான்மை பெற்றது. கூட்டணியில் உள்ள கட்சிகளில் பாஜக 89 இடங்கள், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்கள், லோக் ஜனசக்தி ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 19 இடங்கள், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 இடங்கள், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை வென்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் தற்போதைய முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார், NDA எம்.எல்.ஏ.க்கள் குழுவின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பீஹார் முதல்வராக 10வது முறையாக இன்று (நவம்பர் 20) நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதலவர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பதவியேற்றனர். சட்டசபை தேர்தலில் NDA பெறுத்த வரலாறு காணாத வெற்றிக்காக பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் கூட்டணி தலைவர்கள் பீஹார் மக்களுக்குப் நன்றி தெரிவித்தனர்.
பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்று நிகழ்ச்சிக்கு சிறப்பை சேர்த்தனர்.
நீடிக்கும் நிதிஷ் குமார் ஆட்சி!
பீஹாரில் நீண்டகாலமாக முதல்வராக பதவி வகித்து வருபவர் நிதிஷ் குமார். அவரது அரசியல் வாழ்க்கை பயணம்:
1951 மார்ச் 1: பீஹார் மாநிலம் நாளந்தா மாவட்டம் பஹ்தியாபூரில் பிறந்தார்.
1972: பாட்னா NIT-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்து பீஹார் மின்வாரியத்தில் பணியில் சேர்ந்தார்.
1973: மஞ்சு குமாரி சின்ஹாவை திருமணம் செய்தார். பின்னர் அரசு பணியை விட்டு அரசியலில் காலடி வைத்தார்.
1974–77: அவசரநிலைக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் நடந்த மக்கள் போராட்டத்தில் இணைந்தார்.
1985: பீஹார் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1987: யுவ லோக் தளம் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பீஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. இன்று அவர் 10வது முறையாக பீஹார் முதல்வராக பதவியேற்று புதிய சாதனையை நிறுவியுள்ளார்.

