எத்தியோப்பியாவில் சுமார் 12,000 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) என்ற எரிமலை திடீரென வெடித்ததால், வான்வெளியில் மிகப்பெரிய அளவில் சாம்பல் மேகங்கள் உருவாகி வருகின்றன. இந்த சாம்பல், சர்வதேச விமானப் போக்குவரத்தில் கடும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்பின் தாக்கம் இந்தியாவுக்கும் வந்து சேரத் தொடங்கியதால், கண்ணூரில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் (6E 1433) பாதுகாப்பு காரணங்களுக்காக அகமதாபாத் விமான நிலையத்திற்கு மாற்றி விடப்பட்டது.
பறப்பின் நடுப்பகுதியில் எரிமலை சாம்பல் மேகம் வான்வெளியை பாதிக்கத் தொடங்கியதாக சர்வதேச எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து, விமானத்தின் பாதை உடனடியாக மாற்றப்பட்டது.
ஹெய்லி குப்பி எரிமலை வெடித்ததில் உருவான சாம்பல் மேகங்கள் 10 முதல் 15 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தில் பரவி, செங்கடல் வழியாக கிழக்கு நோக்கி நகர்கின்றன. இந்த மேகம் ஓமன், ஏமன் வழியாக இந்தியாவின் வடக்கு வான்வெளி நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடக்கு இந்திய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என விமானப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, இந்தியாவின் DGCA மற்றும் பல ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நிலைமையை விறுவிறுப்பாக கண்காணித்து வருகின்றன.
ஆகாசா ஏர், “பயணிகளின் பாதுகாப்பு எங்களின் முதலாவது முன்னுரிமை. எரிமலை சாம்பல் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையான மாற்றங்களை சர்வதேச விதிமுறைகளின்படி செய்கிறோம்” என்று அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனமும் தனது விமான பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளது. அகமதாபாத் சென்றடைந்த பயணிகளை மீண்டும் கண்ணூருக்கு அழைத்து செல்ல மாற்று சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.
எரிமலை வெடிப்பு காரணமாக சாம்பல், புகை மற்றும் பாறைத் துகள்கள் கிழக்கு ஆபிரிக்கா முதல் வளைகுடா நாடுகள் வரை பரவியுள்ளதால், பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

