சென்னை:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனது எம்எல்ஏ பதவிக்கு ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுகவில் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வந்த செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். 9 முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும், கட்சியில் பல பதவிகளையும் வகித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
OPS–டிடிவி இணைப்பு கோரிக்கை – பதவி நீக்கம்
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார். இதற்காக கட்சி தலைமையிடம் நேரக்கெடு கேட்டதும், அவரின் கட்சி பொறுப்புகள் நீக்கப்பட்டன.
பின்னர், தேவர் குருபூஜை விழாவில் OPS, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் ஒரே மேடையில் தோன்றியதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் அதிமுகவிலிருந்தும் நீக்கப்பட்டார்.
தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது? – ராஜினாமா மூலம் உறுதி
இந்தநிலையில், செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதுவரை அவர் இதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், இன்று சட்டசபைக்கு வந்து சபாநாயகர் அப்பாவுக்கு தனது எம்எல்ஏ ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
செய்தியாளர்கள் அவரது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்டபோது,
“இன்னும் ஒரு நாள் காத்திருங்கள்” என கூறி சுருக்கமான பதிலை அளித்தார்.
யார் இந்த செங்கோட்டையன்?
1977 முதல் இதுவரை 10 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இதில் 1996 தேர்தலில் மட்டுமே அவர் தோல்வி கண்டுள்ளார்.1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட அவர், அதன் பிறகு தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
1991ல் ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரானபோது, செங்கோட்டையனுக்கு போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது.
2011ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானபோது, அவருக்கு வேளாண் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. சில மாதங்களில் அமைச்சர் பதவி நீக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றபோது தான் செங்கோட்டையனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி கிடைத்தது.
செங்கோட்டையன் விஜயின் புதிய கட்சியில் இணைவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.

