டெல்லி,
இன்று மாலை சுமார் 5.30 மணியளவில், தலைநகர் டெல்லியின் கோவிந்தபுரி அருகே உள்ள சாலையில் ஒரு சொகுசு கார் சென்றுக்கொண்டிருந்தது. அந்த காரில் 38 வயது பெண் தனது 5 வயது மகனுடன் பயணித்து வந்தார்.
அந்த நேரத்தில், கார் அப்பகுதியில் உள்ள சிக்னலில் நின்றிருந்தது. திடீரென அதில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், காரில் சிக்கியிருந்த பெண்ணையும் அவரது 5 வயது மகனையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நடுவழியில் தீப்பற்றி எரிந்த சொகுசு காரில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிகழ்வில் கார் முழுவதுமாக தீயில் கருகி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, காரை ஓட்டிய பெண்ணும் அவரது 5 வயது மகனும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

