தற்போது வேலைவாய்ப்பு சந்தை மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. நீங்கள் கல்லூரி படிப்பை முடித்தவராக இருந்தாலும், அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுபவராக இருந்தாலும், உங்கள் பணிக்கு ஏற்ப ஏஐ கருவிகளை பயன்படுத்தும் திறன் அவசியம். இல்லையெனில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற வாய்ப்புகள் உங்கள் கைக்கு எட்டாததாகிவிடும். சில நேரங்களில், பணி நீக்க நடவடிக்கைக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்படலாம். இதுவே தற்போதைய வேலைவாய்ப்பு துறையின் நிஜ நிலைமை.
அசெஞ்சர் நிறுவனம், தங்களது மொத்த ஊழியர்களில் சுமார் 70% பேர் — அதாவது 7,79,000 பேருக்கு — ஜெனரேட்டிவ் ஏஐ தொடர்பான அடிப்படை பயிற்சி வழங்கியுள்ளது. மேலும், இந்த ஏஐ தொழில்நுட்பத்துக்கேற்ப தங்கள் திறன்களை மேம்படுத்த முடியாத ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. இது டெக் நிறுவனங்களில் தற்போது நடைபெறும் மாற்றங்களை வெளிப்படையாக காட்டும் ஒரு சிறந்த உதாரணமாகும்.
பெரும்பாலான நிறுவனங்கள், தங்களது ஊழியர்கள் அன்றாட பணிகளில் கட்டாயமாக ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளன. குறிப்பாக, கோடிங் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஏஐ கருவிகளையே பயன்படுத்த வேண்டும், மேலும் அவர்கள் எந்த ஏஐ கருவிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதையும் மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு வரை ஊழியர்கள் ஏஐ கருவிகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது கட்டாயமாகி விட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த இக்னைட் டெக் நிறுவனம், ஊழியர்கள் வாராந்திர பணிநேரத்தின் 20%-ஐ ஏஐ தொடர்பான ஆய்வுகளுக்காக ஒதுக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும், ஊழியர்கள் உண்மையில் ஏஐ கருவிகளை பயன்படுத்துகிறார்களா என்பதை நிறுவனம் கண்காணிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஏஐ தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றன. அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த பிடபிள்யூசி மற்றும் மெக்கின்சி போன்ற நிறுவனங்கள், புதியதாக சேரும் ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சியை கட்டாயமாக்கியுள்ளன. மேலும், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிலையிலேயே அவர்கள் ஏஐ திறன் கொண்டவர்களா என்பதை மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
லிங்க்ட்இன் வெளியிட்ட ஆய்வு தகவலின் படி, வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் “ஏஐ அறிவு தேவை” என்ற கோரிக்கை 70% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனங்கள் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. அதேபோல், தங்களது ஊழியர்களும் அந்த மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; இல்லையெனில், இன்றைய கடுமையான போட்டி சூழலில் நிலைத்து நிற்க முடியாது என அவை கருதுகின்றன. இதனால், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் புதிய ஏஐ அப்டேட்களை கற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டால்தான் தங்கள் வேலைவாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

