Home » 2வது டெஸ்ட்: மீண்டும் களமிறங்கிய பந்த் — அரைசதம் விளாசி ரசிகர்களை கவர்ந்தார்!

2வது டெஸ்ட்: மீண்டும் களமிறங்கிய பந்த் — அரைசதம் விளாசி ரசிகர்களை கவர்ந்தார்!

பெங்களூரு,

இந்தியா ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி, தனது முதல் இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 47.3 ஓவர்கள் மட்டுமே நீடித்து 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அடுத்து, 34 ரன் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி, இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கே.எல். ராகுல் 26 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். இப்படியான நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கே.எல். ராகுல் 27 ரன்களில் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கினார். ஆரம்பம் முதலே தாக்குதல்மிகு ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற அவர், பந்துவீச்சாளர்களின் வேகப் பந்துகள் பலமுறை உடலில் பட்டன. ஹெல்மெட், வலது கை, மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அடிபட்டதால், அவர் “ரிட்டயர்ட் ஹர்ட்” ஆகி பெவிலியனுக்குத் திரும்பினார்.

இதனையடுத்து துருவ் ஜுரேல் களமிறங்கினார். தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், ரிஷப் பந்த் மீண்டும் களமிறங்கினார். களத்தில் இறங்கிய அவர், தனது தனிச்சிறப்பான ஸ்டைலில் சிக்சரும் பவுண்டரியும் அடித்து, வெறும் 48 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதிரடியாக ஆடிய அவர் 65 ரன்கள் (54 பந்துகள்) எடுத்தபின் கேட்ச் ஆகி வெளிவந்தார். மறுபுறம், துருவ் ஜுரேல் சதத்தை கடந்த நிலையில் 127 ரன்களுடன் களத்தில் நீடித்தார்.

89.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா ஏ அணி இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 417 ரன்கள் இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி, 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழக்காமல் 25 ரன்கள் எடுத்தபோது, மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *