விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரு இரவு காவலர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், நேற்றிரவு பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். கோவிலில் புகுந்த மர்மநபர்கள் உண்டியல் பணத்தை திருட முயன்றபோது, அதைத் தடுக்க முயன்ற காவலர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்கள் பேச்சிமுத்து (50) மற்றும் சங்கரபாண்டியன் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோவிலின் உண்டியல் சேதமடைந்துள்ள நிலையில், மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டு காவலர்களை கொலை செய்து தப்பியோடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி, பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

