Home » ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர். பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர். பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா 4வது சுற்றில் டைபிரேக்கரில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதற்கிடையில், மற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி மற்றும் பி. ஹரிகிருஷ்ணா டைபிரேக்கரில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

கோவாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில், 4வது சுற்றின் இரு ஆட்டங்களும் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, பி. ஹரிகிருஷ்ணா, வி. பிரணவ், வி. கார்த்திக் ஆகியோரால் டிராவில் முடிக்கப்பட்டன. இதனால் முடிவை தீர்மானிக்க நேற்று டைபிரேக்கர் ஆட்டங்கள் நடைபெற்றன.

அதில், பிரக்ஞானந்தா 1.5-2.5 என்ற கணக்கில் ரஷ்யாவின் டேனியல் துபோவிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறிய பிரக்ஞானந்தா, இந்த முறை 4வது சுற்றிலேயே வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜுன் எரிகைசி 3-1 என்ற கணக்கில் ஹங்கேரியின் பீட்டர் லெகோவை வீழ்த்தினார். அதேபோல், பி. ஹரிகிருஷ்ணா 2.5-1.5 என்ற கணக்கில் சுவீடன் கிராண்ட் மாஸ்டர் நில்ஸ் கிராண்டேலியஸை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இதற்கிடையே, வி. பிரணவ் 0.5-1.5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவிடம் தோல்வியடைந்தார். வி. கார்த்திக் கூட 0.5-1.5 என்ற கணக்கில் வியட்நாமின் லெ குவாங் லீமிடம் போராடி தோல்வியடைந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *