வாஷிங்டன்: திறமையான நிபுணர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கத்தில்தான் ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப் கூறியதாவது:
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி வழங்குவதில் வெளிநாட்டு மாணவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்தால், பல கல்லூரிகள் மூடப்படும் சூழலும், பெரிய பொருளாதார இழப்புகளும் ஏற்படும். வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதை அனுமதிப்பது, நாட்டின் உயர்கல்வி அமைப்பை நிதி ரீதியாக வலுப்படுத்தும் நல்ல வணிக நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தங்கள் செயல்பாட்டைத் தொடர வெளிநாட்டு மாணவர்களை பெரிதும் நம்புகின்றன. வெளிநாட்டு மாணவர்கள் இருப்பது நல்லது என்பதில் நான் உண்மையிலேயே நம்பிக்கை வைத்துள்ளேன். நான் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து மாணவர்கள் சேர்க்கை கடுமையாகக் குறைந்தால், அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளின் பாதி கூட செயலிழந்து மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு டிரில்லியன் கணக்கில் டாலர்கள் பங்களிக்கின்றனர். உள்நாட்டு மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தை விட, வெளிநாட்டு மாணவர்கள் இரட்டிப்பு அளவு அதிகமாக செலுத்துகிறார்கள். அவர்களை நான் விரும்புகிறேன் என்பதற்காக அல்ல, ஆனால் இதை நான் ஒரு வணிகக் கோணத்தில் பார்க்கிறேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக அமெரிக்கா வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி விசாவை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படுத்திய கருத்துகள், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஹெச்-1பி விசாவை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “அமெரிக்கர்களுக்கு சில குறிப்பிட்ட துறைகளில் திறமைய் குறைபாடு உள்ளது. அவர்கள் இன்னும் பயிற்சி பெற்று கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் வெளிநாடுகளில் இருந்து திறமையான நபர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வருகிறோம்,” என்று கூறினார்.
முன்பு ஹெச்-1பி விசா தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த விசாவிற்கான கட்டணத்தை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் சமீபத்திய கருத்துகள், இதற்கு முன் அவரது நிர்வாகம் சர்வதேச மாணவர்கள் மீது விதித்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் முரணானவை. ஏற்கனவே ஆயிரக்கணக்கான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு மாணவர்கள் கைது அல்லது நாடு கடத்தல் போன்ற சூழ்நிலைகளையும் எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஹெச்-1பி விசா தொடர்பாக டிரம்பின் இந்த திடீர் மனமாற்றம், அந்த விசா விதிமுறைகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வாய்ப்பைக் குறிக்கிறது எனவும் கூறப்படுகிறது.

