ஆந்திரப் பிரதேசம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா இன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, கிரிக்கெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, கிஷன் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தனது உரையை முடித்த பின்னர், மரியாதையின் அடையாளமாக பிரதமர் மோடியின் காலில் விழுந்து அவரிடமிருந்து ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
விழாவில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், “பிரதமர் நரேந்திர மோடி ஜி இந்த அரிய தருணத்தில் நம்முடன் இருப்பது எனக்கு பெரும் பெருமை. அவருக்கு என் மனமார்ந்த நன்றி. மோடிஜியின் வருகை இந்த விழாவை இன்னும் சிறப்பாக மாற்றுகிறது. அவர் பகிரப்போகும் சிந்தனைகளை கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்,” என்றார்.
தொடர்ந்து, “இங்கு ஒரே ஒரு ஜாதி தான் உள்ளது — அது மனித ஜாதி. ஒரே மதம் — அது அன்பு. ஒரே மொழி — அது இதயத்தின் மொழி. ஒரே கடவுள் — அவர் எங்கும் நிறைந்தவர்,” என்று சத்ய சாய் பாபாவின் கொள்கைகளை நினைவுகூர்ந்தார். மேலும், “மனிதனுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை” என்ற சாய் பாபாவின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டினார்.
சத்ய சாய் பாபாவுக்கு தனது ஆழ்ந்த பக்தியை ஐஸ்வர்யா ராய் பலமுறை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவுகளில் பலவும் பாபாவின் ஆலோசனைகள் மற்றும் ஆசீர்வாதங்களாலேயே உருவானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் தெரிவித்த இந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளன. “இது நம் இந்திய கலாச்சாரம்… அதை உலக அரங்கில் மிக அழகாக பிரதிபலிக்கிறார் ஐஸ்வர்யா” என்று பலரும் அவரது நடத்தை மற்றும் பண்பை புகழ்ந்து வருகின்றனர்.

