Home » சொகுசு காரில் கிழங்கை விற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் தமிழ்நாட்டு விவசாயி — சமூக வலைதளங்களில் வைரலாகிறார்!

சொகுசு காரில் கிழங்கை விற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் தமிழ்நாட்டு விவசாயி — சமூக வலைதளங்களில் வைரலாகிறார்!

சமூக வலைத்தளங்களில் சில விஷயங்கள் திடீரென டிரெண்டாகி, லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்க்கும். தற்போது அப்படியே அனைவரின் கவனத்தையும் பெற்றிருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விவசாயி.

மயிலாடுதுறை மாவட்டம் முக்கியமாக விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டது. இங்கு நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அந்த மாவட்டத்தின் சீர்காழி அருகே உள்ள அள்ளிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜன், தானே விளைவித்த மரவள்ளிக்கிழங்குகளை சொகுசு காரில் கொண்டு வந்து விற்பனை செய்து தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா காரின் பின்பக்கத்தில், தன் நிலத்தில் விளைந்த மரவள்ளிக்கிழங்குகளை வைத்து விற்பனை செய்யும் விவசாயி ராஜனின் வீடியோ, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாதாரணமாக மரவள்ளிக்கிழங்கை விளைந்த இடத்திலேயே வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். ஆனால், தற்போது மழை பெய்யும் காரணமாக யாரும் வராததால், கிழங்கு வீணாகும் நிலை ஏற்பட்டதாக ராஜன் கூறினார். இதனால், அவர் தானே காரில் எடுத்து வந்து விற்பனை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சாகுபடிக்காக ஏற்கனவே அதிக செலவு செய்துள்ள நிலையில், தனியாக வாகனம் வாடகைக்கு எடுத்து விற்பனை செய்தால் கூடுதல் செலவாகும் என்பதால், தன் சொந்த காரில் மரவள்ளிக்கிழங்குகளை எடுத்து வந்து விற்பனை செய்கிறேன் என ராஜன் கூறியுள்ளார். எர்டிகா காரில் வந்து, 3 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யும் அவர் காட்சிகளில், மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இன்ஸ்டாகிராம் பயனர்கள், இந்த விவசாயி ராஜனை “டிஜிட்டல் விவசாயி”, “சூப்பர்” என்று பாராட்டி வருகின்றனர். ஒரு பயனர், “வெளிநாடுகளில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இவ்வாறு கார்களில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதேபோல் இந்தியாவிலும் இப்போது அப்படியான மாற்றம் காணப்படுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மாருதி எர்டிகா கார் தமிழ்நாட்டில் அதன் வகையைப் பொறுத்து ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலையில்விற்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இதேபோன்று கேரளாவில் ஒரு நபர் ஆடி காரில் கீரை கட்டுகளை கொண்டு வந்து விற்பனை செய்தது சமூக வலைதளங்களில் டிரெண்டானது. சுஜித் என்ற அந்த விவசாயி, ஆடி காரில் சந்தைக்கு வந்து தரையில் விரிப்பு போட்டு, தன் காரிலிருந்து கீரை கட்டுகளை எடுத்து விற்பனை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *