பெலகாவி: பெலகாவி உயிரியல் பூங்காவில் நேற்று மேலும் ஒரு மான் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது..
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கித்தூர் ராணி சென்னம்மா மிருகக்காட்சி சாலையில் தொடர்ச்சியாக மான்கள் உயிரிழக்கும் சம்பவம் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. நேற்று முன்தினம் மேலும் ஒரு மான் இறந்த நிலையில், முதற்கட்ட பரிசோதனையில் ‘ஹிமோரேஜிக் செப்டிசிமியா’ (HS) எனப்படும் பாக்டீரியா தாக்குதலால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த பாக்டீரியா தாக்கினால் 24 மணி நேரத்திற்குள் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதற்கிடையில், நேற்றும் ஒரு மான் இறந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மிருகக்காட்சி சாலையில் உள்ள ஏழு மான்களை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பெங்களூரு பன்னரகட்டா மிருகக்காட்சி சாலையில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவக் குழுவும் சிகிச்சை வழங்கி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பூங்கா நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட பொறுப்பு அமைச்சரான பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நேற்று ஆலோசனை நடத்தினார். பிற விலங்குகளுக்கும் நோய் பரவாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறுகையில், “HS பாக்டீரியா தாக்குதலால் மான்கள் இறந்திருக்கலாம். மீதமுள்ள மான்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் நிலைமையை நெருக்கடியாக கண்காணித்து வருகிறார்கள். நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

