மும்பை: மும்பையில் பிரதான சிஎன்ஜி குழாய் சேதமடைந்ததால், எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நகரம் முழுவதும் உள்ள சிஎன்ஜி பங்குகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் 2002ஆம் ஆண்டில் சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது பஸ்கள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் உள்ளிட்ட மொத்தம் 12.30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிஎன்ஜி எரிவாயுவை பயன்படுத்தி இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த தேவைக்காக ‘மஹாநகர் காஸ்’ நிறுவனம் மும்பை, நவி மும்பை, தானே உள்ளிட்ட நகரங்களுக்கு குழாய்கள் மூலம் சிஎன்ஜி வழங்கி வருகிறது. இதன் மூலம் ஏராளமான குடியிருப்புகளுக்கும் நேரடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மும்பைக்கு இயற்கை எரிவாயுவை வழங்கும் பிரதான குழாய் நேற்று முன்தினம் சேதமடைந்ததால், நகரம் முழுவதும் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சில இடங்களில் எரிவாயு விற்பனை குறைக்கப்பட்டதுடன், பல சிஎன்ஜி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதன் விளைவாக ஆட்டோக்கள், டாக்ஸிகள் உள்ளிட்ட வாகனங்கள் எரிவாயு நிரப்பிக்கொள்ள நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. திங்கட்கிழமை என்பதால், பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் இயக்கத்திலும் சிரமம் ஏற்பட்டது. அலுவலகத்துக்கு செல்லும் பலரும் தங்கள் வாகனங்களில் சிஎன்ஜி நிரப்ப முடியாமல் மிகுந்த அவதிய преж்ந்றனர்.
மும்பை முழுவதும் ஏற்பட்ட சிஎன்ஜி தட்டுப்பாட்டை அடுத்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி வாடகை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் இந்த சேவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

