பாட்னா:
நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சீமாஞ்சல் பகுதிக்கு நீதி கிடைத்தால், நிதிஷ் குமார் தலைமையிலான பீஹார் அரசை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பீஹார் தேர்தலில் 5 இடங்களை வென்றுள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி கூறியதாவது:
“வளர்ச்சி என்பது பாட்னா, ராஜ்கிர் போன்ற பகுதிகளில் மட்டும் நின்றுவிடக் கூடாது. நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சீமாஞ்சல் பகுதியின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.”
அவர் தொடர்ந்து கூறினார்:
“எவ்வளவு காலம் பாட்னா, ராஜ்கிர் ஆகியவற்றையே மையப்படுத்தி வளர்ச்சிப் பணிகள் செய்யப்படுகிறது? சீமாஞ்சல் நதி அரிப்பு, பரவலான ஊழல், இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு இதை தீர்க்க வேண்டும்.”
ஏஐஎம்ஐஎம் எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடு குறித்து அவர் கூறினார்:
“எங்கள் குழுவில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களும் வாரத்தில் இரண்டு முறை தங்கள் தொகுதி அலுவலகத்தில் அமர்ந்து, அந்த பணிகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் எனக்கு அனுப்புவார்கள். இதன் மூலம் அவர்கள் எங்கு உள்ளனர் என்பதையும், எந்த செயல் நடைபெறுகிறது என்பதையும் நேரடியாக கண்காணிக்க முடியும். ஆறு மாதங்களுக்குள் இதை ஆரம்பிப்போம்; ஆறு மாதத்திற்கு ஒருமுறை நான் நேரில் ஆய்வு செய்ய முயற்சிப்பேன்.”
சீமாஞ்சல் பகுதி — எங்கு?
சீமாஞ்சல் பகுதி பீஹாரின் வடகிழக்கு பிராந்தியம் ஆகும். இங்கு முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ளது, மேலும் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
கோசி நதியின் பெருக்கு காரணமாக இப்பகுதி ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், இப்பகுதியின் மக்களில் சுமார் 80% பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.

