ஜெருசலேம்:
இஸ்ரேலில் பாலைவனத்தை பசுமை நிலமாக மாற்றியவர் என்ற பெருமையை பெற்றும், இந்திய அரசின் வெளிநாட்டு இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது பெற்றவருமான எலியாகு பெசலேல் (95), உடல் நலக்குறைவால் காலமானார்.
கேரளாவைச் சேர்ந்த எலியாகு பெசலேல், 1955 ஆம் ஆண்டு மேற்காசிய நாட்டான இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்து அங்கு முதலில் ஆடு மேய்ப்புப் பணியில் ஈடுபட்டார். விவசாயத்தில் இருந்த ஆழ்ந்த ஆர்வத்தால், நெகேவ் பாலைவனப் பகுதியில் முதல் தடவையாக குழாய் நீர் கொண்டு வரப்பட்டதும் அவர் சிறிய அளவில் பயிரிடத் தொடங்கினார்.
பின்னர், தன் முயற்சி மற்றும் புதுமைப் பணிகளால் இஸ்ரேலை உலகின் இரண்டாவது பெரிய ரோஜா ஏற்றுமதியாளராக உயர்த்தியவர். அந்நாட்டில் முதல் நவீன கிரீன்ஹவுஸ் (பசுமை பண்ணை) அமைத்த பெருமையும் அவருக்கே சொந்தம்.
சிறந்த ஏற்றுமதியாளர் விருது, உற்பத்தித் திறனுக்கான கப்லான் விருது உள்ளிட்ட பல்வேறு தேசிய விருதுகளை எலியாகு பெற்றுள்ளார். இஸ்ரேலில் வசித்தாலும் இந்தியாவிற்கான பற்று அவரிடம் எப்போதும் உயிருடன் இருந்தது. ‘என் தாய்நாடு, என் தந்தைநாடு’ என்ற தலைப்பில் ஒரு நூலையும் அவர் எழுதியிருந்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது 2006 ஆம் ஆண்டு எலியாகுவுக்கு வழங்கப்பட்டது. உடல் நலக்குறைவால் சில காலமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் காலமானார். அவருடைய மறைவுக்கு இஸ்ரேல் அரசு மற்றும் மக்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

