வாஷிங்டன்: “1980-களில், பாகிஸ்தானின் அணுஆயுத திட்டத்தின் முக்கிய மையமாக இருந்த கஹுதா அணுசக்தி நிலையத்தை தாக்கும் திட்டத்தை இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து வடிவமைத்தன. ஆனால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்தார்,” என அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் முன்னாள் அதிகாரி ரிச்சர்ட் பார்லோ தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அமைந்துள்ள கஹூதா அணுசக்தி நிலையம், அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களின் முக்கிய மையமாகும். 1980களில் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் நடைபெற்ற இந்த நிலையத்தை, பாகிஸ்தான் அணுஆயுதங்களை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலும், அவற்றை ஈரானுக்கு வழங்காமல் தடுக்கவும் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தும் திட்டத்தை தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடாக ஈரான் திகழ்வதால், அந்த நாட்டின் கைக்கு அணுஆயுதங்கள் சென்றடையாதிருக்க இஸ்ரேல் விரும்பியது.

