பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியரை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ பெயரில் மிரட்டி, 6 மாதங்களில் ரூ.32 கோடி பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
கர்நாடக மாநிலம் பெங்களூரின் இந்திரா நகரில் குடும்பத்துடன் வசிக்கும் 57 வயது பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் ‘சாப்ட்வேர்’ இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். 2024 செப்டம்பர் 15 அன்று, இவருக்கு தெரியாத நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
அழைத்த நபர், தன்னை மும்பை அந்தேரியில் உள்ள டி.எச்.எல். கூரியர் நிறுவன பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு, “உங்கள் பெயரில் மூன்று கிரெடிட் கார்டுகள், நான்கு பாஸ்போர்ட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கொண்ட பார்சல் ஒன்று வந்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரி இங்கு உள்ளார், அவரிடம் பேசுங்கள்” என கூறினார்.
அதன்படி, சி.பி.ஐ. அதிகாரி போல் பேசிய மற்றொரு நபர், அப்பெண்ணின் வங்கி கணக்குகள், பண பரிவர்த்தனை போன்ற தனிப்பட்ட தகவல்களை அறிந்துகொண்டார். மேலும், “உங்கள் ஆவணங்களை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் போலீசில் புகார் அளிக்கக் கூடாது; யாரிடமும் சொல்லக்கூடாது; இல்லை என்றால் உங்கள் குடும்பத்தினரையும் வழக்கில் சிக்கவைக்கும்” என்று மிரட்டினர்.
இதனால் பயந்த அப்பெண், குடும்பத்தாரிடம் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். அந்நேரத்தில் அவர் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ நிலையில் இருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, ‘சி.பி.ஐ. அதிகாரி பிரதீப் சிங்’ என கூறி தொடர்பு கொண்ட நபர், “உங்களுக்கு டிஜிட்டல் அரெஸ்ட் விதிக்கப்பட்டுள்ளது. உங்களின் சொத்துகள் மற்றும் பண விவரங்களை தெரிவியுங்கள்” என கூறினார்.
அதை உண்மையாக நம்பிய அப்பெண், அனைத்துத் தகவல்களையும் வழங்கினார். 2024 செப்டம்பர் 23 அன்று ‘ரிசர்வ் வங்கி அதிகாரி’ போல பேசிய நபர், “உங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. விசாரணை முடிந்ததும், பணம் திரும்ப வழங்கப்படும்” என கூறி, பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு மாற்றும்படி கூறினார்.
இதன்படி அப்பெண், தன் பிக்ஸ்ட் டெப்பாசிட் தவிர, சேமிப்பில் இருந்த ரூ.31.83 கோடியை படிப்படியாக அந்த கணக்குகளுக்கு மாற்றினார். “2025 பிப்ரவரி முதல் பணம் திரும்பும்” என நம்பவைத்தனர். ஆனால் பிப்ரவரி கடந்தும் பணம் வரவில்லை. கேட்டபோதும் தப்பித்துப் பேசினர்.
மகனின் திருமண ஏற்பாடுகள் இருந்ததால் மற்றும் பயம் காரணமாக போலீசில் புகார் அளிக்க அப்பெண் தயங்கினார். சமீபத்தில், தன்னை டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து விடுவித்ததாக கூறி ‘க்ளியரன்ஸ் சான்றிதழ்’ அனுப்பியும் இருந்தனர். பின்னர், தொடர்பை முற்றிலும் துண்டித்தனர்.
இது மோசடி என்பதை உணர்ந்த அப்பெண், நவம்பர் 14 அன்று பெங்களூரு கிழக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர், ஆறு மாதங்களில் 187 வங்கி கணக்குகளுக்கு ரூ.31.83 கோடி பணம் பரிமாற்றம் செய்துள்ளார். கர்நாடகாவில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் இதுவே மிகப்பெரிய நஷ்டம்” என தெரிவித்துள்ளார்.

