Home » பூண்டி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்: விநாடிக்கு 3,000 கனஅடியாக உயர்வு

பூண்டி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்: விநாடிக்கு 3,000 கனஅடியாக உயர்வு

திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, பூண்டி ஏரி மற்றும் புழல் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரியில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் உபரி நீர் வெளியேற்றம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் விநாடிக்கு 700 கனஅடியாக வெளியேற்றப்பட்ட நீர், வரத்து மாற்றங்களைப் பொறுத்து ஏற்றத் தாழ்த்தப்பட்டது. கடந்த மாதம் 24ஆம் தேதி மாலை, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 10,250 கனஅடி நீர் வரத்து பதிவானதால், அன்றைய மாலை 6 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 9,500 கனஅடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் நிலவரத்துக்கு ஏற்ப மீண்டும் குறைக்கப்பட்டும், அதிகரிக்கப்பட்டும் வந்தது.

இன்று காலை 6 மணியளவில் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 790 கனஅடி நீர் வரத்தும், வெளியேற்றம் விநாடிக்கு 2,500 கனஅடியாகவும் இருந்தது. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் இன்றைய நீர் இருப்பு 2,398 மில்லியன் கனஅடியாகவும், நீர் மட்ட உயரம் 32.57 அடியாகவும் பதிவானது. கனமழை எச்சரிக்கையையடுத்து இன்று காலை 8 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

புழல் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் உயர்வு
புழல் ஏரிக்கும் வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நல்ல நீர்வரத்து உள்ளது. எனவே கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் வெளியேற்றம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் விநாடிக்கு 200 கனஅடியாக வெளியேற்றப்பட்ட அளவு, நிலவரத்தைப் பொறுத்து மாற்றப்பட்டது.

இன்று காலை 6 மணியளவில் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,803 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், நீர் மட்டம் 18.95 அடி உயரத்திலும் இருந்தது. வரத்து விநாடிக்கு 285 கனஅடியாகவும், உபரி வெளியேற்றம் 600 கனஅடியாகவும் இருந்தது.

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று காலை 8 மணிக்கு வெளியேற்றம் விநாடிக்கு 1,200 கனஅடியாக உயர்த்தப்பட்டு, பின்னர் மதியம் 2 மணிக்கு அது விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் செல்லும் கொசஸ்தலை ஆறு மற்றும் புழல் உபரி நீர் கால்வாய் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *