அமராவதி,
ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜநகரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவனை, கடந்த திங்கட்கிழமை அவரது தந்தை பள்ளி விடுதியில் சேர்த்தார். ஆனால், பள்ளி விடுதியில் தங்க விரும்பவில்லை என்றும், வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதே விருப்பம் என்றும் மாணவன் தந்தையிடம் தெரிவித்திருந்தார். இருந்தாலும், தந்தை அவரது விருப்பத்தை பொருட்படுத்தாமல் மாணவனை விடுதியில் சேர்த்தார்.
இந்நிலையில், இன்று பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவன் தூக்கிட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் இந்த கடும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

