Home » “தாசில்தார் அலுவலகத்தை OLX-ல் ரூ.20,000க்கு ‘விற்பனை’ செய்ய முயற்சி: அதிர்ச்சியூட்டிய நூதன மோசடி வெளிச்சம்!

“தாசில்தார் அலுவலகத்தை OLX-ல் ரூ.20,000க்கு ‘விற்பனை’ செய்ய முயற்சி: அதிர்ச்சியூட்டிய நூதன மோசடி வெளிச்சம்!

ஓ.எல்.எக்ஸ் (OLX) தளத்தில் தாசில்தார் அலுவலகத்தை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்த விளம்பரப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக, OLX தளம் கட்டில், பீரோ, கார், டிவி, ஏசி, பைக் உள்ளிட்ட பல்வேறு பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களை வாங்கவும் விற்கவும் பயன்படும் தளமாகும். இதனை பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யவும், வாங்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் வெளியான ஒரு விளம்பரப் பதிவு பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரசு அலுவலகம் ஒன்று 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது எனக் கூறப்படும் விளம்பரம் இயல்பாகவே ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.

ஆந்திரப் பிரதேசம் பிரகாசம் மாவட்டம் கிட்டலூர் தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தின் புகைப்படங்களை ஓ.எல்.எக்ஸ் தளத்தில் பதிவேற்றி, “உடனடி விற்பனை – ரூ.20,000” எனக் குறிப்பிட்டு ஒரு நபர் விளம்பரம் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களில் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது.

இதுகுறித்து தகவல் கிடைத்த கிட்டலூர் தாசில்தார் ஆஞ்சநேய ரெட்டி அதிர்ச்சி அடைந்து, மர்க்காபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த விளம்பரத்தை பதிவேற்றிய நபர் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஹைதராபாத் பகுதியில் வசிப்பவர் எனவும், குற்றப் பின்னணி கொண்ட நபர் என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *