சென்னை:
பெண்ணை மிரட்டி 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“விழுப்புரம் அருகே திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் பெண் ஒருவரை ஆறு மாதங்களாக மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ‘காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, நான் முக்கிய புள்ளி’ என திமுக பதவியை பயன்படுத்தி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.”
அவர் மேலும் விமர்சித்ததாவது:
“திமுக ஆட்சியில், திமுகவினரிடம் இருந்தே பெண்கள் பாதுகாப்பு தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சருக்கு நெருக்கமான ஆதரவாளர்களிலிருந்து ஒன்றிய செயலாளர் வரை பாலியல் வழக்குகளில் சிக்குவதை கட்டுப்படுத்த முடியாத தலைவராக முதல்வர் மாறியுள்ளார்.”
இபிஎஸ் தொடர்ந்தும் கூறினார்:
“தன் கட்சிக்குள் உள்ளவர்களை ஒடுக்க முடியாத முதல்வர், தமிழகத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறார்? குற்றச்சாட்டில் சிக்கிய திமுக ஒன்றியச் செயலாளருக்கு உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

