புதுடில்லி:
டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் கைதான ஜசிர் பிலால் வானியை விசாரிக்கும் போது, டில்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது என்ஐஏ சோதனையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
டில்லி செங்கோட்டையில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்தவர் ஹரியானா பரிதாபாத் அல்-பலாஹ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இன்னும் சில மருத்தவர்களுக்கும் இந்த பயங்கரவாத சதியுடன் தொடர்பு இருப்பது தொடக்க விசாரணையிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களை பாதுகாப்பு அமைப்புகள் கைது செய்து, விரிவான விசாரணை நடத்தி வருகின்றன.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் காசிகுந்தைச் சேர்ந்த ஜஸிர் பிலால் வானி, தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் நபியுடன் சேர்ந்து தாக்குதல் சதியில் ஈடுபட்டிருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டில்லியில் தாக்குதல் நடத்த உமர் நபிக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஜஸிர் பிலால் வானி வழங்கியதும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
கைதான ஜஸிர் பிலால் வானியை விசாரிக்கும் போது, டில்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது அம்பலமானது. இந்த ட்ரோன்களில் கேமரா மற்றும் பேட்டரி பொருத்தப்பட்டு, சக்திவாய்ந்த குண்டுகளை ஏற்றிச் செல்லும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. நெரிசலான பகுதிகளில் வெடிப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
சிரியா, ஈராக், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் ஹமாஸ் மற்றும் ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்தும் தாக்குதல் முறைபாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த சதி வடிவமைக்கப்பட்டிருந்ததாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இந்த ஆபத்தான திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஈ.டி. சோதனை
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பாக, நாடு முழுவதும் 25 இடங்களில் அமலாக்கத்துறை (ஈ.டி.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அல்-பலாஹ் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
உமர் நபி பணியாற்றிய அல்-பலாஹ் பல்கலைக்கழகத்தின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘வைட் காலர்’ பயங்கரவாதிகள் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த பல்கலைக்கழகத்தில் காலை முதலே தொடர்ச்சியாக சோதனைகள் நடைபெற்று வருவதால், வளாகம் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

