மதுரை:
தாமிரபரணி ஆற்றின் நீரை தனியார் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டருக்கு வெறும் ஒரு பைசாவுக்கு விற்பனை செய்கிறார்களா? என்ற கேள்வியைக் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் இந்த விசாரணை நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுத்து வரும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நீர்வரி பாக்கியை வசூலிக்க வேண்டும்; வசூலித்த நிதியை ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார்.
வழக்கின் விசாரணையில் நீதிபதிகள்,
கடந்த 20 ஆண்டுகளாக நீர் விலை உயர்த்தப்படாதது ஏன்?
தாமிரபரணியில் இருந்து எத்தனை நிறுவனங்கள் நீர் எடுத்து வருகின்றன?
என்று கேள்வி எழுப்பினர்.
அதேபோல், தினமும் எவ்வளவு அளவில் நீர் எடுக்கப்படுகிறது என்பதற்கான விரிவான விவரங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.