சென்னை :

தமிழகத்தில் வறண்ட வானிலை சில நாட்கள் நீடித்த பின், பிப்ரவரி 19-ந்தேதி முதல் மாநிலத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளிலும், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தற்போது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் தாக்கத்தால், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக இன்று முதல் பிப்ரவரி 18 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஆனால், பிப்ரவரி 19-ந்தேதி முதல் மாநிலத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், பிப்ரவரி 20-ந்தேதி தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட தமிழக மாவட்டங்களில் பிப்ரவரி 19 வரை அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

  • பிப்ரவரி 15-ந்தேதி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம்.

  • பிப்ரவரி 16-ந்தேதி: விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மிதமான பனிமூட்டம்.

  • பிப்ரவரி 17-ந்தேதி: திருவள்ளூர், சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் பனிமூட்டம்.

  • பிப்ரவரி 18-ந்தேதி: கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம்.

  • பிப்ரவரி 19-ந்தேதி: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22°C அளவில் இருக்கும். நாளையும் இதேபோன்ற வானிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18-ந்தேதி மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.