இம்பால்: 2023 மே மாதத்தில் வெடித்த வன்முறைக்குப் பிறகு, முதல் முறையாக வரும் நவம்பர் 20-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம் செய்ய உள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நவம்பர் 20 முதல் 22 வரை மணிப்பூருக்கு வருகை தர உள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் மாநிலத்துக்கு வருகிறார் என பொதுச் செயலாளர் தருண்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தருண்குமார் சர்மா கூறியதாவது: “ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எங்கள் தலைவர் மணிப்பூருக்கு வருகிறார். நவம்பர் 20 அன்று இம்பாலின் கோன்ஜெங் லெய்காயில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மற்றும் குறிப்பிடத்தக்க நபர்களை அவர் சந்திப்பார். நவம்பர் 21 அன்று மணிப்பூரின் மலைப்பகுதி பழங்குடியின தலைவர்களையும் பாகவத் சந்தித்து உரையாடுவார்.”
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெடித்த வன்முறைக்குப் பிறகு, மணிப்பூருக்கு மோகன் பாகவத் மேற்கொள்ளும் இது முதல் பயணமாகும். அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு மணிப்பூரைச் சென்றுவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அசாமுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார்.
2023 மே 3ஆம் தேதி மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையில் வன்முறை வெடித்து, சுமார் 250 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட நிலையாற்றத்தால், முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். பின்னர், மணிப்பூரில் இந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பதவிக்காலம் 2027 வரை நீடிப்பதால், மீண்டும் மணிப்பூரில் அரசு அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்படியான சூழ்நிலையில் மோகன் பாகவத் மணிப்பூருக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகியுள்ளது.

