கோவை: தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பொதுமக்களும் தொண்டர்களும் உற்சாகமான வரவேற்பை வழங்கினர். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள், கை அசைத்து வாழ்த்தி மோடியை வரவேற்றனர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று மதியம் கோவை வந்த பிரதமருக்கு, பரபரப்பான வரவேற்பு காத்திருந்தது.
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர் மு. பெ. சாமிநாதன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, தமாகா தலைவர் ஜி. கே. வாசன், பாஜக முன்னாள் தமிழகத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்.
பின்னர், விமான நிலையத்திலிருந்து கொடிசியா கண்காட்சி அரங்கம் நோக்கி பிரதமர் பயணம் செய்யும் போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் கையசைத்தபடி, வரவேற்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் தனது காரில் முன்நகர்ந்தார்.
பின்னர், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாடு 2025–ஐ பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், இயற்கை முறையில் பயிரிட்ட விவசாயிகள் தயாரித்த விளைப்பொருட்களை அவர் பார்வையிட்டார். மேலும், அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, பயிரிடும் முறைகள் மற்றும் உற்பத்தி அனுபவங்கள் குறித்து விசாரித்தார்.