சென்னை: சரிசமமான நேரலை ஒளிபரப்பு கோரிக்கை – திமுகவை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சென்னை: சட்டப்பேரவையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் சரிசமமாக நேரலையில் காட்ட வேண்டும், ஆளும் கட்சிக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இது தற்போதைய திமுக அரசின் நேரலை ஒளிபரப்பு முறையை மறைமுகமாக விமர்சிப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிடுகிறார்கள்.

திமுக ஆட்சியில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், பெரும்பாலும் கேமராக்கள் ஆளும் கட்சி அமைச்சர்கள், முதல்வர் மற்றும் அவர்கள் பேசும் பகுதிகளை மட்டுமே காட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் பேசும்போது அல்லது அமளியில் ஈடுபடும்போது கேமராக்கள் காட்சியை முற்றிலுமாக விட்டு விடுவதாக ஒரு பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையைத்தான் பிரேமலதா “சரிசமமான வாய்ப்பு” என்ற வாக்கியத்தில் கோரிக்கை வைத்து விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் பேசுகையில், “மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்த முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களே சாட்சி; அந்த மரபில் இருந்து ஒரு துளி கூட மாறாமல், அண்ணன் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவர்கள் நடுநிலையோடு இருந்து, ஒரு தராசைப் போல செயல்பட்டு, அனைவருக்கும் சமமான வாய்ப்பு தர வேண்டும். உங்கள் ஆணாக இருந்தாலும், அன்னையாக இருந்தாலும் அவைக்கு நடுநிலை காட்ட வேண்டும்” என்று நேரடியாக சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அதேசமயம், “அன்பு தம்பி முதல்வர் விஜய் அவர்களுக்கு அண்ணனாக இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இதே அவையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். ஆளும் கட்சியை மட்டும் கேமரா போக்கஸ் செய்யாமல், அவையில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் நேரலையில் மக்கள் காண வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மட்டுமல்லாது, அதிமுக ஆட்சியின் காலத்திலும் (2011–2021) சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக நேரலையில் வரவில்லை. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் உள்ளிட்ட பலரின் பேச்சுகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு, மக்களுக்கு அது தெரியாமல் போனதையும் இதன் மூலம் மறைமுகமாக நினைவூட்டினார். சட்டசபை ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்குமான இடம் என்பதை உணர்த்தியது இந்தக் கோரிக்கை. சபாநாயகர் நடுநிலையாக செயல்பட்டு, எதிர்க்கட்சிகளின் வாதங்களை மக்கள் கண்முன்னால் பார்க்க வழிசெய்ய வேண்டும் என்பதே பிரேமலதாவின் அரசியல் எதிர்பார்ப்பாக உள்ளது.