மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், செஞ்சி அருகே உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினார். அரசியலின் அவசியம் மற்றும் மாணவர்களின் பங்கு குறித்து அவர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது அரசியல் வருகை குறித்துத் தெளிவுபடுத்திய கமல்ஹாசன், “நான் முதலமைச்சர் நாற்காலியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவுக்கு வருபவர்கள் நேரடியாக நட்சத்திரமாகவே நுழைவேன் என்று கூறினால், அது அவர்களின் விவரமின்மையைக் காட்டும். அதேபோல, அரசியலும் ஒரு அன்றாட நிகழ்வாக மாற வேண்டும். நமக்கு எப்படிப் பசி என்பது இயல்பான உணர்வோ, அதுபோல அரசியலும் மக்களின் அன்றாட நடவடிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், “மாணவர்கள் முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். வெறும் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் (Reels) செய்து கொண்டிருப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. ஒரு தனிமனிதன் அல்லது ஒரு அரசியல்வாதியின் பின்னால் மந்தையாகச் செல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. உங்கள் சுய சிந்தனையைப் பயன்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த தனது கருத்தைப் பதிவு செய்த அவர், “அரசியல்வாதிகள் மோசமாக லஞ்சம் வாங்குகிறார்கள் என்று நாம் குறை கூறுகிறோம். ஆனால், அதில் நமது பங்களிப்பும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கொடுக்கிற கை நீண்டால்தான், வாங்குகிற கை நீளும். லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். எனவே, ‘எல்லோரும் நல்லவர்கள்தானே, நாம் நம் வேலையைப் பார்த்துவிட்டுப் போகலாம்’ என்று நினைப்பவர்கள் அரசியலில் மாற்றம் கொண்டுவர முடியாது” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து எச்சரித்த அவர், “சுயநலக்காரர்களின் கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளது. மாணவர்கள் அந்தத் தொழில்நுட்பத்தை மிக அளவோடும், விவேகத்தோடும் பயன்படுத்த வேண்டும். நம் ஊர் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதற்கு அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்லாதீர்கள். அதற்குத் தார்மீக அடிப்படையில் நீங்களும் ஒரு காரணம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பொறுப்புணர்வுடன் செயல்படும் போது மட்டுமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்” என்று அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.