சென்னை:
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உதவியுடன் தானியங்கி அபராதம் விதிக்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்ததாவது:
ஜப்பான் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் (Intelligent Transport Management System – ITMS) திட்டத்தின் பணிகள் தற்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முடிவடைந்தவுடன் அடுத்த 6 மாதங்களுக்குள் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் நிறுவப்படும் நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் போக்குவரத்து விதிமீறல்கள் துல்லியமாக கண்டறியப்படும்.
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னல் மீறுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட குற்றங்களை தானாகவே பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும்.
இந்த திட்டம் மூலம் போக்குவரத்து ஒழுங்கை மேம்படுத்துவதோடு, சாலை விபத்துகளை குறைப்பதற்கும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.