சென்னை:
பிரைட் மாதம் 2026-ஐ முன்னிட்டு பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வலியுறுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு மணல் சிற்பத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
உலகம் முழுவதும் ஜூன் மாதம் ‘பிரைட் மாதம்’ (Pride Month) ஆக அனுசரிக்கப்படுகிறது. திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் பல்வேறு பாலின அடையாளங்களைக் கொண்ட சமூகத்தினரின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக அங்கீகாரத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வரிசையில், சென்னை மாநகராட்சியும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியின் Gender and Policy Lab, Tamil Nadu Rainbow Coalition (TNRC) மற்றும் சமூக அடிப்படையிலான பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மணல் சிற்பம் மூலம் பாலின சமத்துவம், மனித உரிமைகள், பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாலின அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை காரணமாக யாரும் பாகுபாடு அல்லது அவமதிப்புக்கு ஆளாகக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், ஜூன் மாதம் உலகம் முழுவதும் பெருமை மாதமாக அனுசரிக்கப்படுவதாகவும், திருநங்கைகள் மற்றும் பல்வேறு பாலின அடையாளங்களை கொண்ட சமூகத்தினரின் மேம்பாடு மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாலினம் தொடர்பான கிண்டல், பாகுபாடு மற்றும் ஒதுக்கல் போன்ற மனப்பான்மைகளை சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கல்வி, சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே இந்த மணல் சிற்பம் எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார்.
பிரைட் மாதத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் கட்டடம் ஜூன் 23 முதல் ஜூன் 30 வரை வானவில் நிறங்களில் ஒளிரூட்டப்பட்டு வருகிறது. இது பன்முகத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்துள்ளது.
அதேபோல், சமூகத்தின் பின்தங்கிய பாலின சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் இரவு நேர காப்பகங்களில் சில, திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தனியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பாதுகாப்பற்ற பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு தெருவிளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் மற்றும் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு மணல் சிற்பம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பாலின சமத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.