சென்னை:
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து உட்கட்சி குழப்பங்களை சந்தித்து வந்த அதிமுகவில், முக்கிய நிர்வாக மாற்றங்களை பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு பொறுப்புகள் பறிக்கப்பட்டிருந்த சில முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக உருவாகின. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சில எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். மேலும், தவெக அரசின் நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பிலும் அவர்கள் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.
இந்த சூழலில், பழனிசாமி தலைமையுடன் மோதலில் ஈடுபட்ட பலரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரச முயற்சிகளுக்குப் பிறகு, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுக தலைமையுடன் இணக்கமாக செயல்படத் தொடங்கினர்.
இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள புதிய நிர்வாக அறிவிப்பில், முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது அதிமுகவில் அவர்களின் செல்வாக்கு இன்னும் தொடர்கிறது என்பதற்கான முக்கிய சிக்னலாக பார்க்கப்படுகிறது.
மேலும், தலைமை நிலையச் செயலாளராக வரகூர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், எஸ்.பி.சண்முகநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக ஏடிசி பொன் தனபாலனும், செயலாளராக பெல் தமிழரசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளை சரிசெய்து, அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த நியமனங்கள் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதாக கருதப்பட்ட தலைவர்களுக்கு மீண்டும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது, கட்சியில் சமரச அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.
ஆனால் இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயர் இடம்பெறாதது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சிக்குள் தனி அணியை வழிநடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், புதிய நிர்வாக அமைப்பில் இடம் பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுக வட்டாரங்களில், இது கட்சி தலைமையின் அரசியல் செய்தியாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் எதிர்ப்பாளர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், மற்றொரு புறம் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணிகளை கருத்தில் கொண்டு, அதிமுக தனது அமைப்பை மறுசீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த புதிய நியமனங்கள் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.