அரபிக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கோடை வெயிலால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு சற்றே நிம்மதி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த மழை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.