
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வருகிற மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடர்ந்து ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற விஜய், அங்கு சாமி தரிசனம் செய்தார். கோவில் அர்ச்சகர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, நினைவாக வேல் வழங்கினர். விஜயின் இந்த விஜயம் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், நாளை விஜய் நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுக்கு முன்பாக அவர் மேற்கொண்டு வரும் இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயம் இந்தியாவின் முக்கிய கிறிஸ்தவ புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு பிரார்த்தனை செய்து, பொதுமக்கள் நலன் மற்றும் அமைதிக்காக வேண்டுதல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜயின் இந்த ஆன்மீக பயணம் அவரது அரசியல் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முன்னோட்டமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.