அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2,708 காலிப்பணியிடங்களுடன், மேலும் காலியாக உள்ள 1,292 பணியிடங்களையும் இணைத்து மொத்தம் 4,000 பணியிடங்களாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்பான சட்டப்பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தடைகள் நீங்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் பேராசிரியர் பணிக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதுடன், அரசுக் கல்லூரிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையும் குறையும் என அவர் கூறியுள்ளார்.

தமிழக உயர்கல்வித் துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, உதவிப் பேராசிரியர் பணியிடங்களை 4,000 ஆக உயர்த்தி உடனடியாக நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய்யை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.