பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர். கௌஷிக் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோடம்பாக்கம் மண்டலத்தின் பல வார்டுகளில் நடைபெற்று வரும் பூங்கா மேம்பாடு, நடைபாதை அமைப்பு, பாலப் பணிகள், போக்குவரத்து சந்திப்பு மேம்பாடு, கால்வாய் பராமரிப்பு மற்றும் அம்மா உணவக செயல்பாடுகள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, விருகம்பாக்கம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மழைநீர் வடிகால் அமைப்புகள் முறையாக செயல்பட தேவையான பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரம், பொருட்களின் இருப்பு மற்றும் சேவை நிலைமைகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. அதேபோல், கோயம்பேடு மற்றும் அசோக் பில்லர் பகுதிகளில் போக்குவரத்து மேம்பாட்டு பணிகள் மற்றும் பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வார்டு 138-ல் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளை பார்வையிட்ட அவர், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.