2004-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற கோர பள்ளி தீ விபத்தில் உயிர்தப்பிய சிறுமி ஜெனிபர், தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். விரைவில் துணை கலெக்டராக பொறுப்பேற்க உள்ள அவரது வெற்றி பலருக்கும் ஊக்கமாக மாறியுள்ளது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின்போது 4-ம் வகுப்பு மாணவியாக இருந்த ஜெனிபர், தம்பியுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் தனது நண்பர்கள் பலரை இழந்த அந்த சம்பவம் அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிய மாவட்ட ஆட்சியரின் பணிகள் ஜெனிபரை பெரிதும் கவர்ந்தன. அதுவே எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற கனவை அவருள் விதைத்தது.
பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், தனியார் பயிற்சி மையங்களின் உதவியின்றி வீட்டிலேயே கடினமாக உழைத்து தேர்வுக்கு தயாரானார். மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து தனது படிப்பை தொடர்ந்த அவர், தாயின் ஆதரவுடன் இலக்கை நோக்கி பயணித்தார்.
அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த பலனாக, குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து துணை கலெக்டர் பணிக்கு தேர்வாகியுள்ளார். துயரத்தை தன்னம்பிக்கையாக மாற்றி வெற்றி கண்ட ஜெனிபரின் பயணம் பல இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.