திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், ஒரு மாநிலக் கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு தி.மு.க எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறினார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைக்கும் இயக்கமாக தி.மு.க செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளின் உடை, தோற்றம் மற்றும் தனிப்பட்ட செயல்பாடுகள் அதிகம் பேசப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், “முதல்வர் கோட் போட்டார், டிபன் கேரியர் எடுத்துச் சென்றார், வாட்ச் கட்டினார், செஸ் விளையாடினார் என்பதெல்லாம் செய்தியாகி வருகிறது” எனக் கூறினார்.
இதுபோன்ற விஷயங்களை விட மக்களின் பிரச்சினைகள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் நடைபெறும் முக்கிய சம்பவங்களே அதிக முக்கியத்துவம் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களைப் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் வெளியாகும் செய்திகளை கவனமாக படித்து, அதிலுள்ள உண்மைகளை அறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.