தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 65 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.
தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார், லெவிஞ்சிபுரம் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த 59 வயதான சுடலைமணி என்பது தெரியவந்தது. மேலும், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அதிகளவில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர். அவரிடமிருந்து 65 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.