தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், “மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி” என்ற மூன்று நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற உள்ளது.

வரும் ஜூன் 23 முதல் 25 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மொபைல் போன் ஹார்ட்வேர், சிப் லெவல் சர்வீசிங், சார்ஜிங் பிரச்சினைகள், மதர்போர்டு பழுதுகள், டிஸ்ப்ளே சரிசெய்தல், சாப்ட்வேர் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து நேரடி பயிற்சி வழங்கப்படும்.

மேலும், Qualcomm, MediaTek உள்ளிட்ட சிப்செட் தொழில்நுட்பங்கள், மொபைல் Fault Diagnosis, Soldering Techniques, Network Repair, FRP Unlock போன்ற மேம்பட்ட பயிற்சிகளும் இடம்பெறுகின்றன.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், திருநங்கைகள், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் மற்றும் ஏற்கனவே மொபைல் சர்வீஸ் துறையில் உள்ளவர்களும் இதில் பங்கேற்கலாம்.

பயிற்சி நிறைவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தொழில் தொடங்க விரும்புவோருக்கு அரசு மானியங்கள் மற்றும் நிதியுதவி திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.