மதுரை:

உலக வெண்புள்ளிகள் தினத்தை முன்னிட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் உடல்நலம் மற்றும் சுகாதாரத் துறை, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் டெபோரா ஞானசெல்வம், ராஜேஷ், ஜான் லிவிங்ஸ்டன், நோடல் அதிகாரி பியூலா ரூபி கமலம் மற்றும் தொழில்கல்வி இயக்குநர் குணசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ். தினகரன், வெண்புள்ளி நோய் மற்றும் சருமத்திற்கு நிறம் அளிக்கும் மெலனோசைட் செல்களின் செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

மேலும், வெண்புள்ளிகள் தொடுதல் மூலமாகவோ அல்லது சாதாரண தொடர்புகளின் மூலமாகவோ பரவக்கூடிய நோய் அல்ல என்றும், இதுகுறித்த தவறான நம்பிக்கைகளை மக்கள் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் வெண்புள்ளி தொடர்பான ஓவியங்கள் வரைந்தனர். தொடர்ந்து, சமூகத்தில் விழிப்புணர்வை பரப்பும் நோக்கில் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

திருமங்கலம் பள்ளித் தலைமையாசிரியை விஜயலட்சுமி, வெண்புள்ளி நோய் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை பாகுபாடின்றி அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.