பெங்களூருவில் பிரபல நடிகையின் வீட்டில் வசித்து வந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவைச் சேர்ந்த வைஷாக் (45) என்பவர் கார் பணிமனை நடத்தி வந்த தொழிலதிபர் ஆவார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், நடிகை கிருஷி தாபண்டாவுடன் ஏற்பட்ட நெருக்கம் பின்னர் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த உறவு காரணமாக வைஷாக் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து, நடிகை கிருஷி தாபண்டாவின் வீட்டிலேயே வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வைஷாக் ஏற்கனவே ஒரு சர்ச்சை வழக்கிலும் சிக்கியிருந்தார். நடிகை கிருஷியுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் அரவிந்த் ரெட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் நடிகையுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று நடிகை கிருஷி தாபண்டா படப்பிடிப்பு பணிக்காக நெலமங்களா பகுதிக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் வைஷாக் நடிகைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை அவரை சமாதானப்படுத்த முயற்சித்ததுடன், உடனடியாக வீட்டிற்கு திரும்பி வந்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் வைஷாக் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சம்பவத்திற்கு முன்பு வைஷாக் யாருடனாவது பேசினாரா, ஏதேனும் கடிதம் அல்லது தகவல் விட்டுச் சென்றாரா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நடிகை கிருஷி தாபண்டாவிடமும் விசாரணை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் பெங்களூரு திரையுலக மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகளுக்குப் பிறகே தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.