பாங்காக்: தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையில் உள்ள தா முயென் தாம் கோவிலுக்கு உரிமை கோரிக்கை காரணமாக பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதத்தில், எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதியதில், கம்போடியா வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஜூலை 24 முதல் 28 வரை நடந்த போரில் 48 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த காலப்பகுதியில் எல்லையில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் முடிவுக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்று தாய்லாந்து கம்போடியா மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் முதலில் கம்போடியா அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து கூறியுள்ளது.
ஆனால், தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவத்தால் தாய்லாந்து–கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.