தோஹா: இஸ்ரேல்–ஹமாஸ் இடையே காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த போர், சர்வதேச சமூகத்திற்கு பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பாஸ்தீனர்கள் உயிரிழந்ததுடன், உயிர் பிழைத்தவர்களும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பட்டினிச்சாவை சந்தித்தனர்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டத்தை ஏற்று இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. பின்னர் எகிப்தில் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், காசாவில் பதற்றம் முழுமையாக விலகவில்லை. துப்பாக்கிச் சூடு, குண்டுவீச்சு போன்றவை அன்றாட நிகழ்வாகவே தொடர்கின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் மீது துருக்கி மற்றும் எகிப்து நாடுகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துருக்கி வெளியுறவு மந்திரி ஹக்கன் பிடன் கூறியதாவது: “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் தினந்தோறும் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகுவுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அமெரிக்கா தலையிடாவிட்டால், இஸ்ரேலின் தினசரி மீறல்கள் அமைதி திட்டத்துக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு இறுதிக்குள் டிரம்ப் நேட்டன்யாகுவுடன் பேசுவார் என நம்புகிறேன். குறிப்பாக, இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா செல்லும் போது இந்த பேச்சுவார்த்தை நடைபெறலாம்,” என்றார்.

முன்னதாக, எகிப்து வெளியுறவு மந்திரி பதர் அப்தெல்லட்டி, “இஸ்ரேலின் போர் நிறுத்த விதிமீறலை கண்காணிக்க காசா எல்லையில் அமைதிப்படையை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். இதே கருத்தை துருக்கி வெளியுறவு மந்திரியும் ஆதரித்தார்.

இதற்கிடையில், “போர் நிறுத்தத்தை ஹமாஸ் அமைப்பினரே மீறுகின்றனர்; அதற்கு பதிலடியாகத்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது” என இஸ்ரேல் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.