போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்: 8 பேர் பலி
அமெரிக்காவுக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாக வெனிசுலா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் வழியாக பெருமளவில் போதைப்பொருள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக அவர் பல முறை தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு ஆதரவளிக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் டிரம்ப் முன்வைத்துள்ளார். இதன் காரணமாக வெனிசுலாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையானால் போர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், வெனிசுலா எல்லை பகுதிகளில் அமெரிக்கா போர் கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. மேலும், வெனிசுலாவுக்கு சென்றிருந்த ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க படைகள் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்ற சம்பவமும் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் கும்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்த டிரம்ப் நேரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில், அமெரிக்க கடற்படை மற்றும் பாதுகாப்பு படைகள் பல்வேறு கடல் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றன. இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் 80‑க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கிழக்கு பசுபிக் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று படகுகள் மீது அமெரிக்க படைகள் இன்று தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். படகுகள் முழுமையாக சேதமடைந்ததாகவும், சிலர் கடலில் குதித்து தப்ப முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலால் பசுபிக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச உறவுகளில் புதிய பதட்டத்தை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் பெயரில் அமெரிக்கா மேற்கொள்ளும் இந்த ராணுவ நடவடிக்கைகள், வெனிசுலா மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை மேலும் சிக்கலாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.