ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய இந்தியா – முதல் முறையாக காட்சிக்கு வைத்த ராணுவம்

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையின் போது, இந்தியா–பாகிஸ்தான் எல்லை பகுதியில் இரு நாடுகளின் ராணுவங்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து மோதல் நிலை உருவானது. பின்னர் இரு தரப்பினரும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த மோதலின்போது பாகிஸ்தான் ராணுவம் பல டிரோன்களை இந்திய எல்லைக்குள் அனுப்பியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அவற்றை அனைத்தையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாக சுட்டு வீழ்த்தியது. அவற்றில் ஒன்றான ‘YIHA’ மாடல் டிரோனை இந்திய ராணுவம் முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ராணுவ தளபதியின் இல்லத்தில் இந்த டிரோன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த டிரோன் துருக்கியில் தயாரிக்கப்பட்டது. சுமார் 10 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியை நோக்கி கடந்த மே 10ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் இந்த டிரோனை ஏவியது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த டிரோனை அமிர்தசரஸ் அருகே கண்டறிந்து சுட்டு வீழ்த்தியது.

வீழ்ந்த டிரோனின் பாகங்களை இந்திய ராணுவ அதிகாரிகள் சேகரித்து, அவற்றை ஒருங்கிணைத்து தற்போது காட்சிக்கு வைத்துள்ளனர். டிரோனின் அமைப்பு, அதில் பொருத்தப்பட்டிருந்த வெடி பொருட்கள், மற்றும் அதன் தொழில்நுட்ப விவரங்கள் குறித்து ராணுவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த டிரோன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது, பாகிஸ்தான் பயன்படுத்தும் ஆயுத தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன் குறித்து முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவம் எடுத்த துல்லியமான பாதுகாப்பு நடவடிக்கைகளின் சான்றாகவும் இந்த டிரோன் காட்சி பார்க்கப்படுகிறது.