அமெரிக்க அதிபர் டிரம்ப், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுடன் உரையாடியபோது, ராணுவ வீரர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற இந்த உரையில், ஆயுதப் படைகளின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் ‘போர்வீரர் ஈவுத்தொகை’ என்ற புதிய பணப் பரிசு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
1776 ஆம் ஆண்டு அமெரிக்கா நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், இந்த ஊக்கத்தொகை 1,776 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.1.60 லட்சம் ஆகும். 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாகவே இந்த தொகை வழங்கப்படும் என்றும், காசோலைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார். “நமது ராணுவ வீரர்களை விட இந்த அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்கள் யாரும் இல்லை” என அவர் கூறினார்.
தனது ஆட்சிக் கால சாதனைகளைப் பற்றியும் டிரம்ப் விரிவாக பேசினார். கடந்த 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை ஒடுக்கியதாகவும், காசா மோதலை நிறுத்தி 3,000 ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். உயிருடன் இருந்தும், இறந்த நிலையிலும் இருந்த பணயக்கைதிகளை மீட்ட நடவடிக்கைகளையும் அவர் முக்கிய சாதனையாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் பொருளாதார வலிமையை மீட்டெடுத்ததாகவும் டிரம்ப் வலியுறுத்தினார். “மற்ற நாடுகள் மீது விதித்த வரிகளின் மூலம், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருவாய் பெற்றோம். இதன் விளைவாக, அமெரிக்காவிற்குள் சாதனை அளவிலான 18 டிரில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது” என அவர் கூறினார். அமெரிக்காவில் தொழிற்சாலைகள் பெருமளவில் கட்டப்பட்டு வருவதாகவும், நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டால் வரிகள் இல்லை என்ற அறிவிப்பின் பலனாக இது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
அதிபராக பதவியேற்றபோது, நாடு குழப்பமான சூழ்நிலையில் இருந்ததாகவும், அதை சரிசெய்து வருவதாகவும் டிரம்ப் கூறினார். சட்டவிரோத குடியேற்றம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஏழு மாதங்களாக ஒரு சட்டவிரோத குடியேறியும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் அவர் பெருமையாக தெரிவித்தார்.